PropellerAds

முரண்பட்ட குரு

0:00 / 05:18
காலையில் பகவத் கீதை வகுப்பு முடிந்ததும் ரிலாக்ஸாக இருந்த குருவிடம் வந்தான் சுப்பாண்டி.

குருஜி ஒரு சந்தேகம் என்றான்...

சொல்லுப்பா என்பது போல பார்த்தார் குருஜி.

“....சில தினத்திற்கு முன் பகவத் கீதை வகுப்பில் அவர் அவர் நிலைப்பாட்டுக்கு ஏற்ப ஒரு பிறப்பிலே பல பிறப்பிலோ இறைவனை அடைகிறார்கள், உதாரணமாக ஒரு ஊரை அடைய சிலர் நடந்து செல்லுகிறார்கள் சிலர் வாகனத்திற் செல்லுகிறார்கள் என சொன்னீர்கள். ஆனால் இன்று பதினாறாம் அத்தியாயத்தில் இதே பிறப்பில் இறைவனை அடைய முடியும் என சொல்லுகிறீர்களே ஏன் இந்த முரண்பாடு? நீங்கள் தான் சில நேரம் முரண்பாட்டுடன் பேசுவீர்கள் என நினைத்தேன். பகவான் கிருஷ்ணரும் இப்படி முரண்படுகிறாரே?” என கேட்டான் சுப்பாண்டி.



சுப்பு ஒரு கதை ஞாபகம் வருகிறது. ஒரு வழிப்போக்கர் தெருவில் இருப்பவரிடம் கேட்டார், ஐயா இந்த பக்கத்து ஊருக்கு செல்ல எத்தனை நேரம் ஆகும்? தெருவாசி ஒன்றும் பேசாமல் அவரை பார்த்தார். மீண்டும் எத்தனை நேரம் ஆகும்? என கேட்டார். தெருவாசி ஒன்னும் சொல்லவில்லை. வெறுப்படைந்த வழிப்போக்கர் நடக்க துவங்கினார். உடனே அவரை துரத்திக்கொண்டு வந்த தெருவாசி..இன்னும் 30 நிமிடத்தில் சென்று விடலாம் என சொன்னார். வழிப்போக்கர் அதை அங்கேயே சொல்லி இருக்கலாமே என கேட்க, தெருவாசியோ நீங்கள் எத்தனை வேகமாக நடப்பீர்கள் என எனக்கு தெரியாது. நீங்கள் நடந்து சென்ற வேகத்தை வைத்து சொன்னேன் என்றார்.

மெல்லிய புன்னகையுடன் குருஜி விளக்க துவங்கினார், “சுப்பு,  ஒருவர் தெருவில் காருடன் நிற்கிறார். அவரிடம் ஐயா இந்த ஊருக்கு செல்லும் வழி சொல்லுங்கள் என கேட்டு அதன் படி உனது வாகனத்திலோ அல்லது நடந்தோ செல்லுகிறாய் என்றால் அது உன் பொறுப்பு.

இதே ஐயா என்னை உங்கள் காரில் கொண்டு சென்று விடுங்கள் என கேட்டால் அது உன் பொறுப்பல்ல கார் வைத்திருப்பவர் பொறுப்பு. அது போல இறைவனை அடைய நானே முயற்சிக்கிறேன் என்றால் ஒரு பிறப்போ பல பிறப்போ ஆகும். அது உன் முயற்சியும் அதனால் ஏற்படும் அனுபவத்தை பொருத்தது. இதுவே இறைவா நான் உன்னை சரணடைகிறேன் என்னை முக்தி அடைய வை என கேட்டால் அது இறைவன் பொறுப்பு உடனே அவர் இப்பிறவியிலேயே அதை செய்துவிடுவார்..! ”

 குருவும் இறைவனும் எப்பொழுதும் ஒரே விஷயத்தை தான் திரும்ப திரும்ப சொல்லுகிறார்கள். அதை அவர்கள் கண்ணோட்டத்தில் சொல்லுகிறார்களா இல்லை உன் கண்ணோட்டத்தில் சொல்லுகிறார்களா என நீ பார்க்காத வரை குரு முரண்பாடாக பேசுவதை போலவே இருக்கும்.

சுப்பாண்டிக்கு புரிந்தது போலவும் இருந்தது புரியாதது போலவும் இருந்தது...
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment

 
Copyright © 2013. Amazing Videos - All Rights Reserved
Template Created by ThemeXpose