PropellerAds

மாதவிடாய் காலத்தில் பெண்கள் கோவிலுக்கு செல்லலாமா?

0:00 / 05:18
வெகு காலமாக பேசாமல் தவிர்த்து வந்த கருத்து. இரண்டு நாட்களாக ஃபேஸ்புக்கில் என் கருத்தை பிறர் கருத்தாக போட்டு விளம்பரம் தேடுவதை பார்த்தேன். அதனால் இங்கேயும் கருத்துரை இடுகிறேன்.

http://www.vikatan.com/news/article.php?aid=55482

முதல் வரி முதல் இந்த கட்டுரை அபத்தத்தையே பேசுகிறது..

உதாரணமாக

//இந்தியாவில் பெரும்பாலான கோவில்களில், மாதவிலக்கு காலங்களில் பெண்கள் கோவிலுக்குள் நுழையக் கூடாது//

இந்திய கோவில்களில் இல்லை. தென் இந்தியாவில் அதுவும் தமிழக, கேரள கோவில்களில் மட்டுமே இந்த நிலை. வட இந்தியாவில் பெண்கள் இத்தகைய காலத்தில் கோவிலுக்குள் சென்று தங்கள் கைகளால் அபிஷேகமே செய்யலாம். இச்செய்தி எத்தனை போராளிகளுக்கு தெரியும்? இந்து மதம் தடை செய்கிறது புலம்பும் மதவாதிகள் திருப்பதியை தாண்டியதில்லை என புரிகிறது...!

தமிழகத்தில் இருக்கும் ஒரு அமைப்பு 80களில் பெண்களை அவர்களின் வழிபாட்டு தளத்தில் அனுமதிக்க ஆரம்பித்த பொழுது பெரிய புரட்சியாக பார்த்தார்கள். உண்மையில் நம் மரபில் இது எங்கும் தவிர்க்கவோ தடைசெய்யவோ சொல்லவில்லை..

சுகாதாரம் என்ற கருத்தாக்கத்தில் விலகி இருக்க சொன்னார்கள். நம் தென் இந்தியாவில் கோவில்கள் (ஷேத்திரம்) விசேடமானவை, வட இந்தியாவில் தீர்த்தம் ( நீர் தன்மைகள்) விஷேடமானது. தென்னக புகழ் பெற்ற கோவில்களில் கட்டமைப்பு சராசரியாக 2 சதுர கீமி இருக்கும். அதனுள் கழிப்பறை இருக்காது. அதனால் பெண்கள் ஆலயத்தில் நுழைந்து, தரிசன வரிசையில் காத்திருத்தல் என்பது அவர்களுக்கும் பிறருக்கும் சுகாதார பிரச்சனையை உண்டு செய்யும் என்பது உணர வேண்டும்.
இதே வட நாட்டில் தீர்த்தகட்டம் அருகே இருப்பதால் உடனடியாக சுத்தம் செய்ய முடியும்.

ஒரு பெண் மாதவிடாய் காலத்தில் சுகாதாரமான கழிப்பறையை எதிர்பார்ப்பது அவசியம்.  இப்படி கட்டிட கலையின் உச்சத்தில் இருக்கும் கோவிலுக்கே கழிப்பறை சாத்தியமில்லை என்றால் ஒரு காலத்தில் வனமாக இருந்த  சபரிமலை பற்றி யோசிக்க வேண்டும்.

பழைய மரபை கண்மூடித்தனமாக பின்பற்றும் தற்கால தந்திரிகளை ஒன்றும் சொல்லுவதற்கு இல்லை. இப்படியே போனால் சபரிமலைக்கு வரும் சாமிகள் வேன் மற்றும் பேருந்தை தவிர்த்து ஐயப்ப சாமி போல புலி மேல் வர சொன்னாலும் சொல்லுவார்கள்...!

கேரளாவில் மன்னார்சாலை என்ற நாக கோவில் உண்டு. இங்கே இளம் பெண்கள் தான் பூசாரிகள். ஆலயத்தின் ஒரு பகுதிக்கு மேல் ஆண்கள் அனுமதி இல்லை. காரணம் பூசாரிகள் உடை அணிவது இல்லை. இந்த கோவிலுக்குள் ஆண்கள் நுழைய அனுமதிக்க வேண்டும் என யாரும் போராடுவதில்லை.. அது போல கோவிலின் மரபு அதன் தன்மையை மதிக்கும் பொறுப்பு நமக்கு அவசியம். எந்த மரபும் ஒன்று போல இருப்பதில்லை. காலத்தால் அனைத்தும் மாறும்.

ஃபேஸ் புக்கில் Happytobleed என்ற தலைப்பில் சபரிமலைக்கு எதிராக பேசுவது வட நாட்டில் இருப்பவர்களுக்கு ஒரு துளி கூட புரிய போவது இல்லை. மேலும் இது மதம் சார்ந்த ஒரு விஷயம். மதம் கடந்து வர நாம் தயாராக வேண்டுமே தவிர மதத்தை நாம் ஏன் தயார் செய்ய வேண்டும்?

என்னிடம் ஆன்மீக பயிற்சி செய்ய வருபவர்களிடம் மாதவிடாய் தவிர்க்க சொல்லுவது இல்லை. ருத்ராக்‌ஷம் அணிந்தால் ரத்த அழுத்தம் அதிகரிக்கும் அதனால் பெண்கள் மாதவிடாய் காலத்தில் அணியக்கூடாது என்றும் புனிதம் என்றும் கூறுவதை தவிர்த்து ஆய்வு செய்து அதன் அடிப்படையில் எல்லா காலத்திலும் அணியலாம் என கூறுகிறேன். இதற்கு முதலில் தடையாக இருப்பது பெண்கள் தான் , நான் கூறினாலும் இந்த விஷயத்தை செய்ய முன்வருவதில்லை என்பதே நிதர்சனம்..!

இந்த பிரச்சனையில் வெளிச்சத்திற்கு வந்தவைகள் ஊடக அறம், இணைய  போராளிகளின் அறிவு தரம், தம் கலாச்சாரத்தை புரிந்து கொள்ளாத மேல் நாட்டு மோகம். வேறு ஒன்றும் ஆரோக்கியமான விஷயம் நடந்துவிடவில்லை...!

தற்கால இளைஞர்களை சரியான முறையில் வழி நடத்தாமல் கலாச்சாரத்திற்கு எதிராக தூண்டிவிடுவது வெட்கக்கேடானது.
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment

 
Copyright © 2013. Amazing Videos - All Rights Reserved
Template Created by ThemeXpose